திட்டக்குடி அருகே மொபட் மீது லாரி மோதல்; தாய்-மகன் உள்பட 3 பேர் பலி 2 பேர் படுகாயம்
திட்டக்குடி அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் தாய்-மகன் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
ராமநத்தம்,
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் கஞ்சமலபட்டியை சோ்ந்தவர் அருள் மனைவி செல்வி(வயது 45). இவர் தனது மகன் கோபி(22), உறவினரான இருங்களாக்குறிச்சியை சேர்ந்த ராதா மனைவி சமத்துவம்(45), இவருடைய மகன் ராஜ்குமார்(14), கொளஞ்சி மகன் வெற்றிவேல்(12) ஆகியோருடன் ஒரு மொபட்டில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொடிக்களம் பகுதியில் உள்ள தனது குல தெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். பின்னர் அனைவரும் சாமிகும்பிட்டு விட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டனர். மொபட்டை கோபி ஓட்டினார்.
விருத்தாசலம்-திட்டக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கொடிக்களம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வளைவில் திரும்பியபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று இவர்கள் வந்த மொபட் மீது மோதியது. இதில் கோபி, சமத்துவம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். செல்வி, ராஜ்குமார், வெற்றிவேல் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த செல்வி உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. செல்வி, வெற்றிவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே விபத்தில் பலியான கோபி, சமத்துவம் ஆகியோரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.