டாஸ்மாக் கடை ஊழியர் உள்பட 3 பேர் பலி
விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் டாஸ்மாக் கடை ஊழியர் உள்பட 3 பேர் பலியாகினர். 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா கொடும்பாளூர் சவுக்குகாட்டை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 48). இவர், விராலிமலை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு வடகாட்டுப்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் கார்த்திக் (28) என்பவருடன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ரெங்கசாமி ஓட்டினார்.
கொடும்பாளூர்-புதுக்கோட்டை சாலையில் வந்தபோது மாதிரிப்பட்டியை சேர்ந்த நாகராஜ் மகன் கவுதம் (20), ராஜேந்திரன் மகன் பிரவீன்குமார் (19), முருகன் மகன் சூர்யபிரகாஷ் (20) ஆகியோர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ரெங்கசாமி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
3 பேர் பலி
மோட்டார் சைக்கிள்களில் வந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த கவுதம், ரெங்கசாமி, கார்த்திக் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த பிரவீன்குமார், சூர்ய பிரகாஷ் ஆகிய 2 பேரையும் அந்தவழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்த கவுதம், ரெங்கசாமி, கார்த்திக் ஆகிய 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.