வாலிபர்கள் உள்பட 3 பேர் பலி


வாலிபர்கள் உள்பட 3 பேர் பலி
x

வெவ்வேறு விபத்துகளில் வாலிபர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

திருச்சி

ஜீயபுரம், மே.29-

வெவ்வேறு விபத்துகளில் வாலிபர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

கார் மோதியது

திருச்சி தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்தவர் மன்சூர். இவருடைய மகன் சையது இப்ராஹிம் (வயது 20). இவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜ்கபூர் மகன் சையது அஜிம் ராஜ் கபூர் (18) என்பவரும் மோட்டார் சைக்கிளில் கம்பரசம்பேட்டை தடுப்பணைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, திருச்சியில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சையது இப்ராகிம் பரிதாபமாக இறந்தார். சையது அஜிம் ராஜ் கபூர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்றொரு விபத்து

ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் திருநகரை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (47). இவர் திருச்சி பர்மா பஜாரில் வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் இவர் கல்லணை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, குறுக்கே திடீரென வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீதரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஸ்ரீதரன் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாலை தடுப்பில் மோதி பலி

மணப்பாறையை அடுத்த ஆப்பாடிபட்டியைச் சேர்ந்தவர் தருண் பிரசாத் (வயது 20). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை நோக்கி வந்து கொண்டிருந்தார். நொச்சிமேடு அருகே வந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த தருண்பிரசாத் தனியார்ஆஸ்பத்திரியில்சேர்க்கப்பட்டார். பின்னர் திருச்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story