கிணறு தோண்டும்போது வெடி வெடித்J 3 தொழிலாளர்கள் பலி
ஆலங்குளம் அருகே கிணறு தோண்டும்போது வெடி வெடித்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் பால். இவருக்கு சொந்தமான இடம் புதுப்பட்டி-ராம்நகர் சாலையில் உள்ளது. அங்கு கிணறு அமைக்க காளாத்திமடத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, கடந்த 10 நாட்களாக கிணறு தோண்டும் பணி நடந்து வந்தது.
நேற்று காலை வழக்கம்போல் சக்திவேல் மற்றும் ஆனையப்பபுரத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் அரவிந்த் (வயது 22), ராஜலிங்கம் (56), அவரது மகன் மாரிச்செல்வம் (26), ஆலங்குளம் காமராஜர் நகரை சேர்ந்த சாமுவேல் மகன் ஆசீர் சாலமோன் (27) ஆகிய 4 தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர்.
சுமார் 15 அடி ஆழத்துக்கு கிணறு தோண்டப்பட்டிருந்த நிலையில் பாறைகளை தகர்ப்பதற்காக டெட்டனேட்டர் எனப்படும் வெடிப்பொருட்கள் கொண்டு வரப்பட்டு இருந்தது. பொதுவாக டெட்டனேட்டர்களை வெடிக்க பயன்படுத்துவதற்கு முன்பாக மீட்டர் கருவி மூலம் தரையில் வைத்து சோதனை செய்வது வழக்கம்.
அதன்படி, டெட்டனேட்டர்களை சோதனை செய்தபோது, அவை திடீரென வெடித்து சிதறின. இதனால் அரவிந்த், ராஜலிங்கம், மாரிச்செல்வம், ஆசீர் சாலமோன் ஆகிய 4 தொழிலாளர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இதை பார்த்து, சற்று தொலைவில் வேலை செய்து கொண்டிருந்த சக்திவேல் அதிர்ச்சி அடைந்து 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் அக்கம்பக்கத்தினரும் அங்கு ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த வெடிவிபத்தில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ராஜலிங்கம், மாரிச்செல்வம், ஆசீர் சாலமோன் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆசீர் சாலமோன் உயிரிழந்தார். மற்ற 2 பேரும் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், வழியிலேயே ராஜலிங்கம் உயிரிழந்தார். மாரிச்செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வெடிவிபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒப்பந்ததாரர் சக்திவேலை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் 84 டெட்டனேட்டர்களும், 86 ஜெலட்டின் குச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வெடிவிபத்தில் பலியானவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இறந்த ஆசீர் சாலமோனுக்கு சகுந்தலா என்ற மனைவியும், சாமஸ் ஸ்மித் (3), தஷ்வின் (10 மாதம்) ஆகிய 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
கிணறு தோண்டும்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் பலியான சம்பவம் ஆலங்குளம், ஆனையப்பபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.