ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி


ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
x

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

திருப்பூர்

பல்லடம்

பல்லடம் அருகே செங்குட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நோட்டீசு

பல்லடம் ராயர்பாளையம் செங்குட்டை பகுதியில் 42 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த வீடுகள் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று அங்கு வசிக்கும் மக்களுக்கு வருவாய்த் துறை மூலம் நோட்டிஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை வரும் ஜூலை 8-ந் தேதிக்குள் (நேற்று) அகற்ற உத்தரவிட்டது. .

தீக்குளிக்க முயற்சி

இந்த நிலையில் நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்லடம் தாசில்தார் நந்தகோபால், துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், நகராட்சி ஆணையாளர் விநாயகம், தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார், தீயணைப்பு துறை, வருவாய்த்துறை, நகராட்சி பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த பகுதிக்கு நேற்று சென்றனர். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வீடுகளில் உள்ள உங்களது பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள் என தாசில்தார் அங்கிருந்தவர்களுக்கு அறிவுறுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்று இடத்தை வழங்குங்கள். அப்போதுதான் காலி செய்வோம் என பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே அந்த பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி, காளியம்மாள் உள்பட 3 பெண்கள் உடலில் மண்எண்ணெய்யை ஊற்றிக் திடீரென தீக்குளிக்க முயன்றனர். உடனே அருகில் நின்று இருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

இதையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்று இடத்தை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என தாசில்தாரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் வேன் மூலம் பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் என்ற இடத்தில் வழங்கப்படும் மாற்று இடத்தை பார்க்க அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறவில்லை.


Next Story