பெரம்பலூர் மாவட்டத்தில் 3 ஏரிகள் நிரம்பின


பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் 3 ஏரிகள் நிரம்பின. விசுவகுடி அணை பாதியளவு நிரம்பியது.

பெரம்பலூர்

3 ஏரிகள் நிரம்பின

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே அவ்வப் போது பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பச்சை மலை பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்கிருந்து பாயும் ஆறுகளிலும் ஒரு சிலவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது.

மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், பெரம்பலூர் தாலுகாவில் உள்ள லாடபுரம் பெரிய ஏரியும், வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள அரும்பாவூர் பெரிய ஏரியும், குன்னம் தாலுகாவில் உள்ள வடக்கலூர் ஏரியும் என மொத்தம் 3 ஏரிகள் நிரம்பி உள்ளன. இதேபோல் பெரம்பலூர் கீழ ஏரி, துறைமங்கலம் பெரிய ஏரி, ஆயக்குடி ஏரி ஆகிய 3 ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.

அணையில் இருந்து உபரி நீர்...

வேப்பந்தட்டை தாலுகா, விசுவகுடியில் உள்ள அணை பாதியளவு நிரம்பியதால், அங்கிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வெங்கலம் பெரிய ஏரிக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்தப்பகுதிகளை சுற்றி விவசாய பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

கள ஆய்வு

எனவே சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறு மற்றும் ஏரிகளை கள ஆய்வு செய்து உடைப்பு ஏற்படா வண்ணம் கரைகளின் உறுதி தன்மையை ஆய்வு செய்திட வேண்டும்.

மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் தங்கள் பொறுப்பு கிராமத்தில் தங்கி பணியாற்றிட வேண்டும். மேலும் இரவு நேரத்தில் மழை வரும் சமயங்களில் நீர் நிலைகளில் நீரின் அளவை பார்வையிட வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவிட்டுள்ளார்.


Related Tags :
Next Story