தாக்கப்பட்டு இறந்த சிறுமியின் குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது
தாக்கப்பட்டு இறந்த சிறுமியின் குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை அருகே கிள்ளனூர், வாலியம்பட்டி, ஆவுடையாம்பட்டி பகுதியில் சாலையோர கோவில்களில் வெண்கல பொருட்கள் திருட்டு போனதாக கடந்த 14-ந் தேதி உடையாளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் கிள்ளனூர் அடைக்கலம் காத்தார் கோவில் பூசாரி குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கோவில்களில் பொருட்களை திருடியதாக கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே விலங்காட்டூர் பகுதியை சேர்ந்த சத்தியநாராயணசாமி (வயது 48), அவரது மனைவி லில்லி புஷ்பா (38), மகன் விக்னேஷ்வர சாமி (19) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே கோவில்களில் திருடியது தொடர்பாக இவர்களது குடும்பத்தினருக்குத்தான் கடந்த 14-ந் தேதி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் காயமடைந்த அவர்களது மகள் கற்பகாம்பிகா (10) சிகிச்சை பலனின்றி கடந்த 16-ந் தேதி இறந்தாள். இது தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை நேற்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சத்தியநாராயணசாமியின் மனைவி, மகனுடன் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொரு மகன் மற்றும் மகளை காப்பகத்தில் தங்க வைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.