சென்னையில் மாயமான 3 மாணவிகள் சேலத்தில் மீட்பு
சென்னையில் மாயமான 3 மாணவிகளை சேலத்தில் போலீசார் மீட்டனர்.
தனியார் பள்ளி மாணவிகள்
சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த 3 மாணவிகள் அங்கு உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை 3 பேரும் பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்றனர். நேற்று மாலை வெகுநேரம் ஆகியும் அவர்கள் வீட்டிற்கு செல்லவில்லை.
இதையடுத்து பெற்றோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது 3 பேரும் நேற்று பள்ளிக்கு வரவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து மாணவிகள் மாயமானது குறித்து பெற்றோர் கீழ்பாக்கம் போலீசில் புகார் தெரிவித்தனர்.
குழந்தைகள் காப்பகம்
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது 3 பேரும் சென்னையில் இருந்து சேலம் செல்லும் அரசு பஸ்சில் ஏறி இருப்பது தெரிந்தது. இதையடுத்து கீழ்பாக்கம் போலீசார் சேலம் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளப்பட்டி போலீசார் நேற்று இரவு சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்த பஸ்களை சோதனை செய்தனர்.
அப்போது அரசு பஸ் ஒன்றில் இருந்து 3 மாணவிகளும் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இறங்கினர். இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவிகள் மீட்கப்பட்டு உள்ளது குறித்து பள்ளப்பட்டி போலீசார் கீழ்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அவர்கள் மாணவிகளின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மீட்கப்பட்ட 3 மாணவி களையும் குழந்தைகள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.