பள்ளிக்கு செல்லாமல் மாயமான 3 மாணவர்களை விடிய, விடிய தேடிய போலீசார்
நிலக்கோட்டை அருகே பள்ளிக்கு செல்லாமல் மாயமான 3 மாணவர்களை விடிய, விடிய போலீசார் தேடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பள்ளிக்கு சென்ற மாணவர்கள்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த மைக்கேல்பாளையம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த 3 மாணவர்கள், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6 மற்றும் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் ஒன்றாக பள்ளிக்கு செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு செல்வதாக கூறி, சீருடை அணிந்து புத்தகப்பையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றனர். ஆனால் இரவு வரை அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பெற்றோர்கள் அதிர்ச்சி
இதுகுறித்து பள்ளிக்கு சென்று மாணவர்களின் பெற்றோர்கள் விசாரித்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது 3 மாணவர்களும் பள்ளிக்கு செல்லவில்லை.
பள்ளிக்கு செல்வதாக கூறி அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உறவினர் வீடுகளில் தேடியும் அவர்களை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. 3 மாணவர்களையும் யாரேனும் கடத்தி சென்றிருக்கலாம் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது.
விடிய, விடிய தேடுதல் வேட்டை
இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்தார்.
மேலும் அவரது தலைமையிலான தனிப்படை போலீசார் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். விடிய, விடிய போலீசாரின் தேடுதல் வேட்டை நடந்தது. பழனி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களுடன் 3 மாணவர்கள் சென்று விட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.
குறிப்பாக செம்பட்டி, நிலக்கோட்டை பகுதிகளில் கிராமங்கள் தோறும் போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டது. இருப்பினும் மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
இதற்கிடையே செம்பட்டி போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 3 மாணவர்களும் பஸ் நிலையத்தை நோக்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
அதனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும் துப்புத்துலங்காமல் மர்மம் நீடித்தது. விடிய, விடிய போலீசாரும், பெற்றோர்களும் பதற்றத்துடன் காணப்பட்டனர்.
மாணவர்கள் மீட்பு
இந்தநிலையில் செம்பட்டி அருகே உள்ள எஸ்.பாறைப்பட்டி நாடகமேடையில், சீருடை அணிந்தபடி 3 மாணவர்களும் தூங்கி கொண்டிருந்தனர். அவர்களின் அருகே புத்தக பைகளும் இருந்தன. இதனைக்கண்ட கிராம மக்கள் நேற்று காலை அந்த 3 மாணவர்களையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், பள்ளிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய மாணவர்கள் செம்பட்டியில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுள்ளனர். அதன்பிறகு பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்கப்பட்ட உணவை இரவில் சாப்பிட்டு விட்டு நாடகமேடையில் தூங்கியது தெரியவந்தது.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற பெற்றோர்கள், மாணவர்களை மீட்டு தங்களது வீடுகளுக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 3 மாணவர்களையும் விடிய, விடிய போலீசார் தேடி அலைந்த சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.