சோதனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: கரூர் மாநகராட்சி கவுன்சிலர் கைது
கரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
கரூர்,
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மீது வரி ஏய்ப்பு புகார்கள் வருமான வரித்துறைக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்களுடைய வீடு மற்றும் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்துவதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசிய திட்டம் வகுத்து வந்துள்ளனர்.
அதன்படி, கரூர், கோவை, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் நேற்று முன் தினம் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த வகையில் கரூரின் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நெருங்கிய தொடர்புடைய நபர்களின் வீடுகள், அலுவலகங்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, கரூரில் வருமானவரித்துறை சோதனைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சோதனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகளை திமுகவினர் தாக்கிய சம்பவங்களும் அரங்கேறி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், வருமானவரித்துறையினரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக வருமானவரித்துறையினர் போலீசில் புகார் அளித்தனர். அதேவேளை, வருமானவரித்துறையினர் தங்களை தாக்கியதாக திமுகவினரும் புகார் அளித்தனர்.
இந்நிலையில், சோதனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் கரூர் மாநகராட்சி கவுன்சிலர் லாரன்ஸ் உள்பட 3 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 26-ம் தேதி கரூர் மாநகராட்சிக்கு உள்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள அசோக் குமார் என்பவரின் வீட்டிற்கு வருமானவரித்துறையினர் சோதனை நடத்த சென்றனர். அப்போது அங்கு குவிந்த திமுகவினர் சோதனை நடத்த சென்ற பெண் வருமானவரித்துறை அதிகாரி உள்பட 4 பேரை தடுத்துனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் வருமானவரித்துறையினரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏற்கனவே இன்று 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதே வழக்குகளின் கீழ் கரூர் மாநகராட்சி 20வது வார்டு கவுன்சிலர் லாரன்ஸ் உள்பட மேலும் 3 பேரை போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.