மேலும் 3 சார் பதிவாளர்கள் பணியிடை நீக்கம்


மேலும் 3 சார் பதிவாளர்கள் பணியிடை நீக்கம்
x

பத்திரப்பதிவில் முறைகேடு புகார் தொடர்பாக தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மேலும் 3 சார் பதிவாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்

திருநெல்வேலி

பத்திரப்பதிவில் முறைகேடு புகார் தொடர்பாக தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மேலும் 3 சார் பதிவாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

முறைகேடு

வீட்டுமனைகளை முறைகேடாக பதிவு செய்தது தொடர்பாக தமிழகம் முழுவதும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக 19 அதிகாரிகள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது. மேலும் சில சார்பதிவாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக கடந்த மாதம் நெல்லை வந்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு நடத்தினார். அப்போது முறைகேடுகளில் ஈடுபட்ட சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்து இருந்தார்.

3 பேர் பணியிடை நீக்கம்

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவரும், தென்காசி மாவட்டத்தில் 2 பேரும் என 3 சார் பதிவாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி சார்பதிவாளர் ஸ்டெல்லா ஏஞ்சலின், தென்காசி மாவட்டம் பாவூர்சந்திரம் சார்பதிவாளர் வசந்தி, கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் சார்பதிவாளர் செந்தில்குமாரி ஆகிய மேலும் 3 பேரை அமைச்சர் மூர்த்தி உத்தரவின் பேரில் நெல்லை சரக பதிவுத்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.


Next Story