சேலம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் மேலும் 3 பெண்கள் பலி-விபத்தில் சிக்கிய 9 பேரும் இறந்த பரிதாபம்


சேலம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் மேலும் 3 பெண்கள் பலி-விபத்தில் சிக்கிய 9 பேரும் இறந்த பரிதாபம்
x
தினத்தந்தி 12 Jun 2023 2:20 AM IST (Updated: 12 Jun 2023 12:14 PM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்தில் மேலும் 3 பெண்கள் நேற்று உயிரிழந்தனர். இதனால் இந்த ஆலை விபத்தில் சிக்கிய 9 பேருமே இறந்துள்ளனர்.

சேலம்

வெடி விபத்து

சேலம் அருகே சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இந்த ஆலையில் கடந்த 1-ந் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே கந்தசாமியின் மகன் சதீஷ்குமார், நடேசன், பானுமதி ஆகியோர் உடல் சிதறி பலியாகினர்.

எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த பிரபாகரன், மஜ்ரா கொல்லப்பட்டியை சேர்ந்த மோகனா, வசந்தா, மகேஸ்வரி, மணிமேகலை (வயது 46), பிருந்தா (29) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பிரபாகரன், மோகனா, மகேஸ்வரி ஆகியோர் இறந்தனர். மற்றவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

மேலும் 3 பேர் பலி

இதில் நேற்று முன்தினம் இரவு மணிமேகலையும், நேற்று மதியம் பிருந்தாவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். வசந்தாவுக்கு மட்டும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இதன்மூலம் இந்த விபத்தில் சிக்கி காயம் அடைந்த 9 பேரும் பலியானது குறிப்பிடத்தக்கது.


Next Story