சாலையின் மைய தடுப்பில் அரசு பஸ் மோதியதில் 3 பயணிகள் காயம்


சாலையின் மைய தடுப்பில் அரசு பஸ் மோதியதில் 3 பயணிகள் காயம்
x

சாலையின் மைய தடுப்பில் அரசு பஸ் மோதியதில் 3 பயணிகள் காயமடைந்தனர்.

திருச்சி

செம்பட்டு:

திருச்சியில் இருந்து தேவகோட்டை நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டு சென்றது. பஸ்சை தேவகோட்டையை சேர்ந்த டிரைவர் ஆனைமுத்து ஓட்டினார். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் விமான நிலையத்தை அடுத்த செம்பட்டு சோதனைச்சாவடி அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் மைய தடுப்பில் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 3 பயணிகள் லேசான காயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் மற்றும் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் மாற்று பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story