மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவான 3 பேர் கைது
மார்த்தாண்டத்தில் மோட்டார் சைக்கிளை வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் மோட்டார் சைக்கிளை வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவு
மார்த்தாண்டம் அருகே உள்ள தொடுகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்(வயது 25). இவர் மார்த்தாண்டம் சிராயன்குழி பகுதியில் பழைய மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் ஆன்டோ ரூபன் என்பவர் உதவியாளராக உள்ளார்.
சம்பவத்தன்று ஆன்டோ ரூபன் மட்டும் கடையில் இருந்தார். அப்போது, அங்கு வந்த 3 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளை காட்டி விலைக்கு கேட்டு விட்டு, அதை ஓட்டி பார்ப்பதாக கூறி எடுத்துச் சென்றனர். அதன்பிறகு அவர்கள் திரும்பி வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த ஆன்டோ ரூபன், இதுபற்றி உரிமையானர் ஆகாசிடம் கூறினார்.
கேமராவில் உருவம் பதிவு
அதைதொடர்ந்து ஆகாஷ், மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மார்த்தாண்டம் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார்.
அப்போது, அதில் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றவர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
விசாரணையில் மோட்டார் சைக்கிள் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்றது நாகர்கோவில் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சகோதரர்களான பிரவீன்(20), நவீன்(19) மற்றும் 15 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் நாகர்ேகாவில் பகுதியில் சுற்றித்திரிந்த பிரவீன், நவீன், 15 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுசீந்திரம் பகுதியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளை திருடி மார்த்தாண்டம் சிராயன்குழி பகுதியில் உள்ள ஆகாசின் பழைய வாகனங்கள் விற்பனை செய்யும் கடையில் விட்டுள்ளனர். பின்னர், அந்த கடையில் மற்றொரு மோட்டார் சைக்கிளை வாங்குவதாக கூறி ஓட்டி பார்ப்பது போல் நடித்து திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி பிரவீன், நவீன் ஆகிய 2 பேரையும் நாகர்கோவில் சிறையிலும், 15 வயது சிறுவனை பாளையங்கோட்டையில் உள்ள சீர்திருத்தப்பள்ளிலும் சேர்த்தனர்.
கைது செய்யப்பட்ட பிரவீன், நவீன் மீது ஏற்கனவே 4 வழக்குகளும், 15 வயது சிறுவன் மீது 6 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.