தொழிலாளியை வெட்டிய 3 பேர் கைது
திண்டுக்கல் அருகே தொழிலாளியை வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துரை வடக்கு தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 42). விவசாயி. நேற்று முன்தினம் இவர், தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அறிவழகனிடம் பணம் கேட்டு மிரட்டி, அரிவாளால் வெட்ட முயன்றனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேஷ் (40) என்பவர் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், வெங்கடேசனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பொன்மாந்துரை புதுப்பட்டியை சேர்ந்த அன்பழகன் (21), ஆர்.வி.நகரை சேர்ந்த குணசீலன் (22), பாறைப்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் (22) ஆகியோர் வெங்கடேசனை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.