கடமானை வேட்டையாடிய 3 பேர் கைது


கடமானை வேட்டையாடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 24 May 2023 12:30 AM IST (Updated: 24 May 2023 12:05 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே கடமானை வேட்டையாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, புல்லாவெளி பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனவர் அறிவழகன், வனக்காப்பாளர்கள் பீட்டர் ராஜா, திலகராஜா, ராமசாமி ஆகியோர் அந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது பெரும்பாறை அருகே உள்ள நேர்மலை என்ற பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது.

இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது சிலர் நெற்றியில் விளக்கை கட்டி ெகாண்டு சுற்றித்திரிந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது 3 பேர் மட்டும் சிக்கினர். மற்றவர்கள் தப்பி ஓடினர். இதையடுத்து பிடிபட்டவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் வெள்ளரிக்கரையை சேர்ந்த ஜோதிலிங்கம் (வயது 31), மஞ்சள்பரப்பை சேர்ந்த ரஞ்சித் (33), மதன்குமார் (19) என்பதும், கடமானை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடமான் இறைச்சி ஒரு நாட்டு துப்பாக்கி, 4 ஏர்கன் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் கத்தி, அரிவாள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைதானவர்களிடம் மேல் விசாரணை நடத்தியதில், வன விலங்குகளை அவர்கள் வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story