வழிபறியில் ஈடுபட திட்டமிட்ட 3 பேர் கைது
அரக்கோணம் பகுதியில் வழிபறியில் ஈடுபட திட்டமிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணம் பகுதிகளிலில் கஞ்சா, வழிபறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர்களை கைது செய்யவும், குற்ற சம்பவங்களை தடுக்கவும் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனி சேகர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இநத்நிலையில் நேற்று அரக்கோணம் - திருவள்ளூர் ரோட்டில் உள்ள அரக்கோணம் அரசு ஐ.டி.ஐ. அருகே புதர்மண்டியிருந்த இடத்தில் மூன்று பேர் பேசும் சத்தம் கேட்டு அந்த இடத்தில் போலீசார் சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு சிலர் திருவள்ளூர் ரோட்டில் செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவது குறித்து பேசிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து 3 பேர் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து டவுன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டதில் அரக்கோணம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (23), அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் பகுதியை சேர்ந்த அஜித் (20), ஆவடியை சேர்ந்த நரேஷ் (22) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் கத்தி, உருட்டு கட்டை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.