மேல்மலையனூர் அருகே செல்போன் கோபுரங்களில் பேட்டரி திருடிய 3 பேர் கைது
மேல்மலையனூர் அருகே செல்போன் கோபுரங்களில் பேட்டரி திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே எய்யில் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயநைனார் மகன் அப்பன் (வயது 50). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் தனியார் செல்போன் கோபுரம் உள்ளது. இந்த செல்போன் கோபுரத்தில் இருந்த பேட்டரிகளை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் அவலூர்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் சத்யாநந்தன் தலைமையில் தனிப்படை அமைத்தும் திருடர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் அவலூர்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் மேல்மலையனூர் அருகே மேல்செவலாம்பாடி கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் மறித்தனர். போலீசாரை பார்த்ததும் அதில் வந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் விரட்டிச்சென்று, 3 பேரை மட்டும் மடக்கிப்பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில் செல்போன் கோபுரத்தில் உள்ள பேட்டரிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் விழுப்புரம் வி.மருதூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் சந்திரன் மகன் சுசீல்குமார் (26), திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த நசுருதீன் மான்கள் ஜாவித் அன்சாரி (29), ராஷித் அன்சாரி (20) ஆகியோர் என்பதும், இவர்கள் பல்வேறு பகுதிகளில் செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுசீல்குமார் உள்பட 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த ரூ.7½ லட்சம் மதிப்புள்ள 5 பேட்டரிகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய விழுப்புரத்தை சேர்ந்த காமில் மாலிக் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.