ஆடு திருடிய 3 பேர் கைது
ஆடு திருடிய 3 பேர் கைது
திருச்சிற்றம்பலம் அருகே நள்ளிரவில் ஆடு திருடிய 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஆடுகள் தொடர் திருட்டு
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் பகுதியில் அண்மைக்காலமாக பல்வேறு இடங்களில் ஆடுகள் திருடுவது தொடர் கதையாகி வருகிறது. இதையடுத்து திருச்சிற்றம்பலம் போலீசார் இரவு நேரங்களில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் ஆடுகள் திருடு போவது தொடர்ந்து நடந்து வருகிறது.
3 பேர் கைது
நேற்றுமுன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள மடத்திக்காடு ஊராட்சி மன்ற வளாக மேற்கு குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் ரவி என்பவருக்கு சொந்தமான ஆடுகளை திருட வந்த 18 வயது சிறுவன், பேராவூரணி அருகே உள்ள காலகம் கிராமத்தை சேர்ந்த சுப்பையன் மகன் கபாலி (வயது26), மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் அழகியநாயகியபுரம் கிராமத்தை சேர்ந்த மாதவன் மகன் கார்த்திகேயன் (19) ஆகிய 3 பேரையும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விரட்டி பிடித்து திருச்சிற்றம்பலம் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து திருச்சிற்றம்பலம் போலீசார் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து செல்போன்கள் , மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.