ஆடுகள் திருடிய 3 பேர் கைது
வடமதுரை அருகே வேனில் ஆடுகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடமதுரை அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவர், தனது வீட்டின் அருகில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள ஓடை அருகே மேய்ச்சலுக்காக தனது ஆடுகளை கட்டி வைத்திருந்தார். அப்போது வேனில் வந்த ஒரு கும்பல், முருகனின் 2 ஆடுகளை திருடிக்கொண்டு, அதே வேனில் தப்பினர். இதனைக்கண்ட அப்பகுதி சிறுவர்கள் ஊர் பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சுதாரித்துகொண்டு, சந்தேகப்படும் வகையில் ஏதேனும் வாகனங்கள் வருகிறதா? என்று கண்காணித்தனர். அப்போது ஆம்னி வேன் ஒன்று வேகமாக வந்தது. இதனால் அந்த வேனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். அப்போது அந்த வேனில் வந்த 3 பேர், முருகனின் ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை வடமதுரை போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்னர் வேனில் வந்த நபர்களிடம் போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் அய்யலூர் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்த தங்கதுரை (வயது 25), வேடசந்தூர் அருகே உள்ள கருப்பதேவனூரை சேர்ந்த பிரகாஷ் (20), நாயக்கனூரை சேர்ந்த ராஜேந்திரன் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, ஆடுகளை கைப்பற்றினர். மேலும் அவர்களிடம் இருந்து ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.