விவசாயி வீட்டில் நகை திருடிய 3 பேர் கைது
விவசாயி வீட்டில் நகை திருடிய 3 பேர் கைது போலீசார் செய்தனர்.
விருதுநகர் அருகே உள்ள வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (வயது 39). இவரும், இவரது மனைவியும் வீட்டை பூட்டி சாவியை ஜன்னல் அருகே வைத்துவிட்டு விவசாய வேலைக்கு சென்று விட்டனர். மாலை வீடு திரும்பியபோது வீட்டு கதவு திறந்து கிடந்தது. வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 4 பவுன் நகை திருட்டு போயிருந்தது. உடனே ராமர் இது பற்றி தனது சகோதரரிடம் தெரிவித்த போது, சகோதரர் மகன் ராமரின் வீட்டிற்குள் அதே கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி, முத்துக்குட்டி ஆகியோர் வந்து சென்றதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து ராமர் தனது உறவினர்களுடன் சென்று தேடிய போது அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி(22), முத்துக்குட்டி(20), குட்டியான்(20) ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்றனர். ராமர் மற்றும் அவரது உறவினர்கள், 3 பேரையும் பிடித்து சோதனையிட்டபோது அவர்களிடம் ராமர் வீட்டில் திருட்டு போன 4 பவுன் நகை இருந்தது. 3 பேரையும் வச்சக்காரப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் மேற்படி 3 பேரையும் கைது செய்தனர்.