வாலிபர் கொலையில் 3 பேர் கைது
ஆலங்குளம் அருகே நடந்த வாலிபர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே நடந்த வாலிபர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
வாலிபர் கொலை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு கிடாரகுளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் மணிகண்டன் (வயது 25), பொக்லைன் எந்திர டிரைவர்.
இவர் ஒரு வழக்கு தொடர்பாக தென்காசி கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜராகிவிட்டு மதியம் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். கிடாரகுளம் பாலத்தின் அருகே வந்தபோது, ஒரு மர்ம கும்பல் திடீரென்று மோட்டார் சைக்கிளை வழிமறித்து அரிவாளால் மணிகண்டனை ெவட்டியது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
3 பேர் கைது
இதுபற்றி ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மணிகண்டன் கொலை வழக்கு தொடர்பாக ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரை சேர்ந்த இசக்கிமுத்து, இசக்கி பாண்டி, ரமேஷ் ஆகிய 3 பேர் நேற்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கோர்ட்டில் சரணடைய வந்தனர்.
தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீசார், அந்த 3 பேரையும் சரணடைவதற்கு முன்பே மடக்கிப்பிடித்து கைது செய்து ஆலங்குளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் தீவிரமாக விசாரணை நடத்தினார்.
பழிக்குப்பழியாக...
அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 4-ந் தேதி ஆலங்குளம் அருகே நாச்சியார்புரத்தில் செல்லத்துரை என்பவருக்கு சொந்தமான ஆட்டுக் கிடையில் நெட்டூரை சேர்ந்த முத்துப்பாண்டி மற்றும் அவரது நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் ஆடுகளை திருடச் சென்றனர். அப்போது காவலில் ஈடுபட்டிருந்த செல்லத்துரை, அவரது மகன்கள் காளிராஜ், உச்சிமாகாளி மற்றும் உறவினர்களான வேல்முருகன், மணிகண்டன் ஆகியோர் தடுத்துள்ளனர். அப்போது இருதரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தியபோது முத்துப்பாண்டி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையில் மணிகண்டனுக்கும் தொடர்பு இருந்ததால் அவரையும் போலீசார் வழக்கில் சேர்த்தனர். கொலை தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நேற்று முன்தினம் தென்காசி கோர்ட்டில் ஆஜராகி விட்டு வீடு திரும்பியபோது மணிகண்டன் படுகொலை செய்யப்பட்டார். எனவே பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.