இரணியல் அருகே சோக சம்பவம்: ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை


இரணியல் அருகே சோக சம்பவம்: ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை
x

இரணியல் அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த பிணங்கள் மீட்கப்பட்டன.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த பிணங்கள் மீட்கப்பட்டன.

வீட்டில் துர்நாற்றம்

இரணியல் அருகே உள்ள தாந்தவிளை பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 46). பெயிண்டர். வாடகை வீட்டில் வசித்து வந்த அவர் 2 தங்கைகளுடன் அங்கு தங்கியிருந்தார். மூத்த சகோதரி ஸ்ரீதேவிக்கு 44 வயதும், இளைய சகோதரி உஷா பார்வதிக்கு 38 வயதும் ஆகியிருந்தது. இவர்கள் 3 பேருக்கும் திருமணமாகவில்லை.

இந்தநிலையில் அந்த வீட்டில் இருந்து நேற்று மாலையில் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அந்த வீட்டின் கேட் மற்றும் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இது அவர்களுக்கு சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.

அழுகிய நிலையில் 3 பிணங்கள்

உடனே இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கிறிஸ்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

வீட்டின் கதவை உடைத்தபடி உள்ளே சென்று பார்த்த போது போலீசாருக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அங்குள்ள ஹாலில் பாபு தூக்கில் தொங்கிய நிலையிலும், அதற்கு கீழே தரையில் உஷா பார்வதியும் பிணமாக கிடந்தனர். ஸ்ரீதேவி சமையல் அறையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இந்த 3 உடல்களும் அழுகிய நிலையில் இருந்தன.

பரபரப்பு தகவல்

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், வாடகை வீட்டில் வசித்து வந்த பாபு கடந்த 9-ந் தேதி அன்று அதற்குரிய வாடகையை தச்சன்பரம்பில் உள்ள உரிமையாளரிடம் நேரில் சென்று கொடுத்துள்ளார். அதற்கு மறுநாள் முதல் வீட்டில் அவர்களின் நடமாட்டம் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் அன்றைய தினமே 3 பேரும் தற்கொலை செய்ததால் உடல்கள் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் பாபுவின் சொந்த ஊர் வில்லுக்குறி அருகே உள்ள கீழப்பள்ளம் ஆகும். இவருடைய தந்தை பெயர் மாதவன்பிள்ளை. கடந்த 8 ஆண்டுகளாக பாபு தாந்தவிளையில் உள்ள வாடகை வீட்டில் குடியேறி தனது 2 தங்கைகளுடன் வசித்து வந்தார். பாபுவின் உழைப்பை நம்பி தான் 2 தங்கைகளும் இருந்தனர். இதனால் பாபு திருமணம் செய்யாமல் அவர்களின் நலனுக்காக இருந்துள்ளார். அதே சமயத்தில் அவர்களுடைய தங்கைகளுக்கும் திருமணமாகவில்லை.

8 வருடமாக அதே வீட்டில் வசித்தாலும் அக்கம் பக்கத்தினரிடம் 3 பேரும் சரிவர பேசாமல் இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே பாபுவின் இளைய தங்கை உஷா பார்வதிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இந்தநிலையில் தான் 3 பேரும் வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சந்தேகம்

பாபுவும், ஸ்ரீதேவியும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையிலும், உஷா பார்வதி தரையில் பிணமான நிலையிலும் கிடந்தனர். இதனால் தூக்கில் தொங்கிய பாபு, ஸ்ரீதேவி ஆகிய 2 பேரும் தற்கொலை செய்திருக்கலாம் என்பதை போலீசார் உறுதி செய்தனர். அதே சமயத்தில் உஷா பார்வதி விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.

இதற்கிடையே போலீசார் 3 பேருடைய உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகாமல் வசித்து வந்த நிலையில் உடல்நிலையும் மோசமானதால் வாழ்க்கையில் வெறுப்படைந்து இந்த விபரீத முடிவை 3 பேரும் எடுத்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வீட்டில் தற்கொலை செய்த சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story