மளிகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் மளிகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
மலைக்கோட்டை, ஆக.25-
வெவ்வேறு சம்பவங்களில் மளிகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
மளிகைக்கடை உரிமையாளர்
திருச்சி மேலசிந்தாமணி காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 48). இவர் மேல சிந்தாமணி பழைய கரூர் ரோட்டில் மளிகைக்கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை மகேந்திரன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகேந்திரனுக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது.
பெண் தற்கொலை
திருச்சி கோட்டை கிலேதார் தெரு, வள்ளிமால் தெருவை சேர்ந்தவர் சர்தார்கான். இவரது மனைவி ஆசிபா (53). இவர்களது மகன் முகமது அலிகான். இவர் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
ஆசிபாவின் அண்ணன் மகன் சமீபத்தில் விபத்தில் இறந்தார். இதனால் மன வருத்தத்தில் இருந்த ஆசிபா வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனநல காப்பகம்
வாத்தலை அருகே குணசீலத்தில் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் கட்டுப்பாட்டில் மனநல காப்பகம் இயங்கி வருகிறது. இக்காப்பகத்தில் 12 பேர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் வாத்தலை பகுதியில் சுற்றித்திரிந்த 45 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவரை அப்பகுதியை சேர்ந்த சிலர் குணசீலம் கோவில் காப்பகத்தில் சேர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. அவருடன் சேர்ந்து மனநல காப்பகத்தில் 13 பேர் பராமரிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை காப்பகத்தில் இருந்த பெயர் விலாசம் தெரியாத அந்த ஆண் திடீரென காப்பகத்தில் இருந்த மின் விசிறியில் தான் அணிந்திருந்த வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின் பேரில் வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.