மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி


ஆற்றூர் அருகே மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

ஆற்றூர் அருகே மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

வாழைக்குலை வியாபாரி

குமரி மாவட்டம் ஆற்றூர் அருகே உள்ள தொப்பவிளையை சேர்ந்தவர் சேம் (வயது47). இவர் சொந்தமாக வாகனம் வைத்து வாழைக்குலை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஜெயசித்ரா (45) என்ற மனைவியும், ஆதிரா (24) என்ற மகளும், அஸ்வின் (21) என்ற மகனும் இருந்தனர். மகன் அஸ்வின் கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

மகள் ஆதிராவை குளச்சலை சேர்ந்த ஸ்ரீசுதன் என்பவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். ஆதிரா தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து அவர் தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்தநிலையில் நேற்று சேம் வியாபாரம் தொடர்பாக வெளியூர் சென்றிருந்தார். மாலை 6 மணியளவில் மனைவி ஜெயசித்ராவும், மகனும், மகளும் வீட்டில் இருந்தனர். அப்போது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது.

மின்சாரம் தாக்கியது

இவர்களது பக்கத்து வீட்டின் தகர கூரை மீது மின்ஒயர் பட்டு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. அப்போது அஸ்வின் வீட்டில் இருந்த இரும்பு கம்பியுடன் வெளியே வந்தார். அந்த கம்பி எதிர்பாராமல் பக்கத்து வீட்டில் உள்ள தகர கூரையின் மீது உரசியது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு தாய் ஜெயசித்ரா மற்றும் சகோதரி ஆதிரா ஆகியோர் ஓடி வந்து அவரை பிடித்து காப்பாற்ற முயன்றனர். இதில் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. 3 பேரும் உடல் கருகிய நிலையில் மயங்கி விழுந்தனர்.

இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் நிலைமைைய புரிந்து கொண்டு பாதுகாப்பாக செயல்பட்டு 3 பேரையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறித்த திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி, தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு உதய சூரியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மின் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தினர்.

மின்சாரம் தாக்கி கர்ப்பிணி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தகர கூரையில் பாய்ந்து கொண்டிருந்த மின்சாரம்

மின்சாரம் பாய்ந்து தாய், மகன், மகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து திருவட்டார் போலீசாரும், மின்வாரிய ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினர். அவர்கள் முதலில் ஜெயசித்திராவின் வீட்டில் இருந்துதான் மின்சாரம் கசிந்து இருக்கலாம் என சோதனை நடத்தினர். ஆனால் சோதனையில் அங்கிருந்து மின்சாரம் கசியவில்லை என்பது உறுதியானது. இதையடுத்து பக்கத்தில் உள்ள வீடுகளை சோதனையிட்ட போது, ஒரு வீட்டின் தகர கூரையின் மேற்பகுதியில் மின்சார ஒயர் தொங்கி கொண்டிருந்ததை கண்டனர். அந்த மின்சார ஒயரை பரிசோதித்த போது அதில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இந்த மின்சாரம் தான் தகர கூரை மீது கசிந்து 3 பேரை காவு வாங்கியது தெரிய வந்தது.

கருவில் இருந்த குழந்தையும் பலியான பரிதாபம்

மின்சாரம் பாய்ந்து இறந்த ஆதிராவின் கணவர் ஸ்ரீசுதன் வட இந்தியாவில் உள்ள ஒரு கப்பல் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கர்ப்பிணியான ஆதிராவுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் கடைசி வாரம் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. அதன்பின்பு ஆதிராவை பெற்றோர் தாய் வீட்டுக்கு பிரசவத்துக்காக அழைத்து வந்தனர். அவர்கள் இன்னும் சில வாரங்களில் தங்களது புதிய வாரிசை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்தநிலையில் தாய் ஆதிரா மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் அவரது வயிற்றில் இருந்த 8 மாத குழந்தையும் பரிதாபமாக இறந்தது. இது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story