திருமங்கலம் அருகே ராணுவ வீரரின் மனைவியை தாக்கி 29 பவுன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் உறவினர் உள்பட 3 பேர் கைது -ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருடியதாக வாக்குமூலம்
திருமங்கலம் அருகே ராணுவ வீரரின் மனைவியை தாக்கி 29 பவுன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் அவருடைய உறவினர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே ராணுவ வீரரின் மனைவியை தாக்கி 29 பவுன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் அவருடைய உறவினர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நகைகள் கொள்ளை
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி தாலுகா குராயூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் அய்யனார் மனைவி கவுசல்யா. அய்யனார் காஷ்மீர் ராணுவ முகாமில் பணியாற்றி வருகிறார். இதனால் கவுசல்யா தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவுசல்யா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டு கதவை தட்டினர். கதவை திறந்து வெளியே வந்த கவுசல்யாவை அவர்கள் கத்தியை காட்டிமிரட்டி வீட்டுக்குள் தள்ளி தாக்கினர்.
மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை மற்றும் கைகளில் அணிந்து இருந்த மோதிரம் ஆகியவற்றை பறித்தனர். பின்னர் அவரை கட்டிப்போட்டு பீரோவில் இருந்த நகைகள் உள்பட மொத்தம் 29 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
உறவினர் சிக்கினார்
இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார் தலைமையில் கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் அதே ஊரை சேர்ந்த கவுசல்யாவின் உறவினரான பிளாவடையான் (32) ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவருடன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது திருமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (32), திருமங்கலம் பொற்கால நகரை சேர்ந்த பாலாஜி (34) என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களையும் கைது செய்தனர்.
ஆடம்பர வாழ்க்கை
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கவுசல்யாவின் வீட்டில் கொள்ளையடித்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் அவர்கள் 3 பேரும் கூடக்கோவில், திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் 48 பவுன் நகைகள், 2 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.