வாலிபர் உள்பட 3 பேர் பலி
வாலிபர் உள்பட 3 பேர் பலியானார்கள்
வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
தொட்டியம் அருகே உள்ள அலகரை மேற்கு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மகன் மகேஷ்பூபதி (வயது22). இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் நண்பர் ஒருவரை மணமேடு பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். மணமேடு கொளக்குடி சாலையில் வாய்க்கால் பாலம் அருகில் வந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மகேஷ் பூபதியை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மகேஷ் பூபதி பரிதாபமாக இறந்தார்.
முதியவர் பலி
இதேபோல் தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (76). இவர் நேற்று தொட்டியம் காட்டுப்புத்தூர் சாலையில் தனது மொபட்டில் கார்த்திகைபட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்த பரமசிவம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக பரமசிவம் இறந்தார்.
தடுப்புக்கம்பியில் மோதினார்
துறையூர் அருகே உள்ள சிங்கிளாந்தபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நடேசன் (67). மர வியாபாரி. நேற்று இவர் முசிறி அருகே உள்ள அய்யம்பாளையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் நாமக்கல் சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டு இருந்தார்.
தொட்டியம் அருகே உள்ள தனியார் பள்ளி அருகே வந்த போது நிலை தடுமாறி போலீசார் வைத்திருந்த தடுப்பு கம்பியில் மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மூன்று விபத்து சம்பவங்கள் தொடர்பாக வந்த தனித்தனி புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.