மொபட் மீது வேன் மோதி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி
வந்தவாசி அருகே மொபட் மீது வேன் மோதி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே மொபட் மீது வேன் மோதி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
அண்ணன்-தம்பி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த வங்காரம் மதுரா ஆவணவாடி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகரை சேர்ந்தவர் நாவப்பன். இவரது மகன்கள் கன்னியப்பன் (50), குருநாதன் (வயது 45). அதே பகுதியை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகன் ரவி (50).
இவர்கள் 3 பேரும் ஒரே மொபட்டில் காமராஜர் நகரில் இருந்து வந்தவாசி நோக்கி இன்று இரவு சுமார் 8.15 மணிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வந்தவாசி - சேத்துப்பட்டு செல்லும் நெடுஞ்சாலையில் வங்காரம் கூட்டு ரோடு பகுதியில் போளூர் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் வேன் திடீரென மொபட் மீது மோதியது.
3 பேர் பலி
இதில் மொபட்டில் வந்த அண்ணன்-தம்பி உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பொன்னூர் போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.