தந்தை- மகள் உள்பட 3 பேர் பலி


தந்தை- மகள் உள்பட 3 பேர் பலி
x

மயிலாடுதுறையில் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த போது அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை-மகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த போது அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை-மகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

தே.மு.தி.க. பிரமுகர்

மயிலாடுதுறை ஐயாறப்பர் தெற்கு வீதியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 38). தே.மு.தி.க. நகர துணை செயலாளராக இருந்த இவர், வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்தார்.

இவருடைய மனைவி சசிகலா. இவர்களுடைய குழந்தைகள் சந்தோஷினி(15), சபரிநாதன்(12), சாய்சக்தி (3). குமரவேல் குத்தாலம் அருகே உள்ள சேண்டிருப்பு மாரியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி நேற்று காலை குமரவேல் தனது மகள் சாய்சக்தி மற்றும் மனைவி சசிகலாவின் சகோதரி மகனான மதுரையை சேர்ந்த நித்தீஸ்குமார் (16) என்பவரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு சேண்டிருப்பு மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.

இவர்களுக்கு பின்னால் ஆட்டோவில் சசிகலா தனது மகள் சந்தோஷினி, மகன் சபரிநாதன் மற்றும் தாயாருடன் சென்றார்.

அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்

இவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் வீட்டுக்கு குமரவேல் மோட்டார் சைக்கிளில் மகள் சாய்சக்தி மற்றும் நித்தீஸ்குமாரை ஏற்றிகொண்டு வந்து கொண்டிருந்தார். இவர்களுக்கு பின்னால் சசிகலா குழந்தைகளுடன் ஆட்டோவில் வந்தார்.

மயிலாடுதுறை ெரயில்வே மேம்பாலத்தில் குமரவேல் சென்ற போது எதிரே மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணத்தை நோக்கி சென்ற அரசு பஸ்சும், குமரவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டது.

தந்தை-மகள் உள்பட 3 பேர் பலி

இந்த விபத்தில்படுகாயம் அடைந்த குழந்தை சாய்சக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் குமரவேல், நித்தீஸ்குமார் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குமரவேல் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து நித்தீஸ்குமாரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் மதுரையில் தொழிற்கல்வி படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

டிரைவர் கைது

இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் மயிலாடுதுறை பட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கரை(40) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு பஸ்- மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தந்தை-மகள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story