குடகனாற்றில் மூழ்கி தந்தை, மகள் உள்பட 3 பேர் பலி


குடகனாற்றில் மூழ்கி தந்தை, மகள் உள்பட 3 பேர் பலி
x

அரவக்குறிச்சி அருகே குடகனாற்றில் மூழ்கி தந்தை, மகள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கரூர்

தர்காவிற்கு சென்றனர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த 3 முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் அம்மாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள தர்காவுக்கு சென்றனர். பின்னர் எருமார்பட்டி ஊராட்சி பண்ணப்பட்டி அருகே உள்ள குடகனாற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளனர். அது மணல் அள்ளுவதற்காக தோண்டப்பட்ட ஆழமான பள்ளம் கொண்ட பகுதியாகும். இந்தநிலையில் பள்ளப்பட்டி சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்த ஷேக்பரித் மகள் மவுபியா (வயது 12) முதலில் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கி உள்ளார்.

3 பேர் பலி

அப்போது மணல் சரிந்து ஆற்றின் ஆழமான பகுதிக்கு சிறுமி இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது அந்த சிறுமி காப்பாற்றுங்கள்.... காப்பாற்றுங்கள்.... என்று அலறினார். இதைக்கண்ட சிறுமியின் தந்தை ஷேக் பரீத் (40) மற்றும் சந்தைப்பேட்டை தெற்குத்தெருவை சேர்ந்த ரியாஜுதீன் (38) ஆகிய இருவரும் சிறுமியை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் இறங்கி உள்ளனர். அப்போது அவர்களையும் தண்ணீர் உள்ளே இழுத்து சென்றது. சிறிது நேரத்தில் மவுபியா, ஷேக்பரீத், ரியாஜுதீன் ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

பிணமாக மீட்பு

இதுகுறித்து அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ஆற்றில் இறங்கி 3 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் 3 பேரின் உடல்களையும் அரவக்குறிச்சி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி மவுபியா பள்ளப்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். அவரது தந்தை ஷேக்பரீத் பாத்திரங்களை தவணை முறைக்கு விற்பனை செய்யும் தொழிலும், ரியாஜுதீன் ஜவுளி வியாபாரமும் செய்து வந்தனர். குடகனாற்றில் மூழ்கி தந்தை-மகள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story