தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது
நகை திருட்டு சம்பவத்தில் வாலிபரை சித்ரவதை செய்ததாக தந்தை-மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நகை திருட்டு சம்பவத்தில் வாலிபரை சித்ரவதை செய்ததாக தந்தை-மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நகை திருட்டு
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள வலச்சேரிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 47). இவரது தாயார் சமீபத்தில் இறந்து விட்டார்.
இதனையடுத்து தனது தாயாரின் இறுதி சடங்கு செய்வதற்காக அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர் ரெங்கசாமி மகன் ராமுக்கண்ணு (27) என்பவர் சுப்பிரமணியனுக்கு உதவியாக இருந்துள்ளார். அப்போது சுப்பிரமணியன் வீட்டில் இருந்த 1 பவுன் நகை திருடு போய்விட்டது.
வாலிபர் சித்ரவதை
இந்த நகை திருட்டு சம்பவத்திற்கும், ராமுக்கண்ணுவிற்கும் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த ஒரு வாரமாக ராமுக்கண்ணுவை பல இடங்களில் மறைத்து வைத்து சுப்பிரமணியன், அவரது மகன் அமர்நாத்(23) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(32) ஆகிய 3 பேரும் சேர்த்து சித்ரவதை செய்து நகையை திருப்பித்தருமாறு கேட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், திருச்சிற்றம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த ராமுக்கண்ணுவை மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தந்தை-மகன் உள்பட 3 பேர் கைது
இதுகுறித்து ராமுக்கண்ணு கொடுத்த புகாரின் பேரில் சுப்பிரமணியன், அவரது மகன் அமர்நாத் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் மீது திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியன் உள்பட 3 பேரையும் கைது செய்து பேராவூரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தார். கைதான சுப்பிரமணியன் திருச்சிற்றம்பலம் ஊராட்சி துணைத்தலைவரின் கணவர் ஆவார்.
இந்த சித்ரவதை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மேலும் சிலர் மீது திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.