சாலை விபத்தில் கொத்தனார் உள்பட 3 பேர் படுகாயம்
சாலை விபத்தில் கொத்தனார் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தார்.
தரகம்பட்டி அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 39). இவர் தனது வீட்டில் இருந்து மணப்பாறை-கரூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வரவணையை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் ஓட்டி வந்த வேன் ஒன்று எதிர்பாராத விதமாக சந்திரசேகர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த இளையராஜாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பொய்கைபுத்தூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(41). கொத்தனாரான இவர், கிருஷ்ணராயபுரம் பஸ் நிலையம் அருகே சாலையை கடக்க நின்று கொண்டிருந்தார். அப்போது, சிவகங்கை மாவட்டம் பருத்தியூர் பகுதியை சேர்ந்த நித்தியன் (40) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக பாலகிருஷ்ணன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் நாமக்கல் மாவட்டம் சோழசிராமணி பகுதியை சேர்ந்தவர் ராகுல் (25). இவர் ஆட்டையாம்பரப்பில் உள்ள செயின் தொழிற்சாலையில் வேலை பார்த்துவிட்டு தனது ஊரில் உள்ள பெற்றோரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அய்யம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையின் தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.