அரசு பணிமனை மேலாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்


அரசு பணிமனை மேலாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
x

அரசு பஸ்சில் இருக்கை கழன்று ரேஷன் கடை ஊழியர் படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக பணிமனை கிளை மேலாளர் உள்பட 3 பேர்களை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி உத்தரவிட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

அரசு பஸ்சில் இருக்கை கழன்று ரேஷன் கடை ஊழியர் படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக பணிமனை கிளை மேலாளர் உள்பட 3 பேர்களை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி உத்தரவிட்டார்.

ரேஷன் கடை ஊழியர் படுகாயம்

தமிழக- கேரள எல்லையான பளுகல் பகுதிக்கு நேற்று முன்தினம் காலையில் மார்த்தாண்டத்தில் இருந்து தமிழக அரசு பஸ் (தடம் எண் 84ஏ) ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

அந்த பஸ்சில் தஞ்சாவூரை சேர்ந்த செல்வராஜ் (வயது 55) என்பவர் பயணம் செய்தார். இவர் மேல்புறம் பகுதியில் தங்கியிருந்து மத்தம்பாலை ரேஷன் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இடைக்கோட்டை அடுத்த அம்பேற்றன்காலை பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென செல்வராஜ் அமர்ந்திருந்த இருக்கை கழன்று பின்நோக்கி விழுந்தது. இதில் நிலைதடுமாறிய செல்வராஜ் பஸ்சில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது.

3 பேர் பணியிடை நீக்கம்

அதைத்தொடர்ந்து குழித்துறை பணிமனை கிளை மேலாளர் தினேஷ், தொழில்நுட்ப கண்காணிப்பாளர் ரத்தினம் மற்றும் டெக்னீசியன் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் குழித்துறை பணிமனை மேலாளர் தினேஷ் உள்பட 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து கழக பொதுமேலாளர் மெர்லின் ஜெயந்தி உத்தரவு பிறப்பித்தார். அதேசமயம் மார்த்தாண்டம் கோட்டமேலாளர் வேலுதாஸ் மீதும் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளக்கம்

இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், "பஸ்சில் இருந்து ரேஷன்கடை ஊழியர் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. பஸ்சின் நிலையை கண்காணித்து பராமரிக்க தவறிய குழித்துறை பணிமனை மேலாளர் உள்பட 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் தற்போது விளக்கம் கேட்கப்பட்டுள்ளது" என்றனர்.


Next Story