விவசாயியை குத்தி கொன்ற பெண் உள்பட 3 பேர் கைது


விவசாயியை குத்தி கொன்ற பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Jan 2023 12:30 AM IST (Updated: 21 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தாடிக்கொம்பு அருகே விவசாயியை குத்தி கொன்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

நாய் குரைத்ததில் தகராறு

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பை அடுத்த உலகம்பட்டியார் கொட்டம் பகுதியை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 62). விவசாயி. இவரது பக்கத்து வீட்டில் உறவினரான செபஸ்தியான் மனைவி நிர்மலா பாத்திமா ராணி (39) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன்கள் டேனியல் (21), வின்சென்ட் ஆரோக்கியதாஸ் (23). இவர்கள் வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்தனர்.

அவர்கள் வீட்டை கடந்து செல்பவர்களை பார்த்து அந்த நாய் குரைத்தும், கடிக்க வருவதுமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நாயை கட்டிப்போட்டு வளர்க்கும்படி ராயப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். அப்போது அதனை நாய் என அழைக்ககூடாது என்று நிர்மலா பாத்திமா ராணி மற்றும் அவரது மகன்கள் ராயப்பனிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் 2 குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

3 பேர் கைது

இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த டேனியல் கத்தியால் ராயப்பனை குத்தி ெகாலை செய்தார். இதையடுத்து நிர்மலா பாத்திமா ராணி, டேனியல், வின்சென்ட் ஆரோக்கியதாஸ் ஆகிய 3 பேரும் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.

இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று தாடிக்கொம்பை அடுத்த காப்புளியம்பட்டி நால்ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த டேனியல் உள்பட 3 பேரை அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story