கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது
தேனி, கூடலூர் பகுதிகளில் கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி அருகே அன்னஞ்சி விலக்கு பகுதியில் தேனி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த வடபுதுப்பட்டி அம்மாபுரம் சாலையை சேர்ந்த செல்வம் மகன் தினேஷ்குமார் (வயது 24) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதற்குள் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது. அதை விற்பனைக்காக வைத்திருந்ததாக தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், கூடலூர் தெற்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தனியார் குடோன் அருகே 2 பெண்கள் துணி பையில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் கூடலூர் எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த ஜெயமணி (63), காஞ்சிமரத்துறை பகுதியை சேர்ந்த காந்தி மாலா (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.