பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேர் கைது
சிவகாசியில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் விதிகளை மீறி பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசியில் உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் விதிகளை மீறி பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பட்டாசு ஆலை
சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் விநாயகர் காலனியை சேர்ந்தவர் பசுபதி. இவரது குடும்பத்துக்கு சொந்தமான பட்டாசு ஆலை பாரைப்பட்டியில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த பட்டாசு ஆலையில் விதிமீறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு ஆலை உரிமத்தை அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்தனர்.
இந்த நிலையில் அந்த ஆலையில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக சிவகாசி கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
3 பேர் கைது
அதன் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு நேற்று முன்தினம் திடீரென சென்றனர். அப்போது அந்த பட்டாசு ஆலையில் சிவகாசி அம்மன் கோவில்பட்டி தென்பாகத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 60), மீனம்பட்டி நடுத்தெருவை சேர்ந்த கண்ணன் (38), புதுதெருவை சேர்ந்த அய்யப்பன் (54) ஆகியோர் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் அந்த ஆலையில் இருந்த முழுமையாக தயாரிக்கப்படாத 6 பெட்டி பட்டாசுகளை பறிமுதல் செய்து சுரேஷ்குமார், கண்ணன், அய்யப்பன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
3 பேர் மீது வழக்கு
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஆலையின் உரிமையாளர்கள் பசுபதி, ஜான்சிராணி, வைத்தியலிங்கம் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுவது குறித்த தகவல்கள் தொடர்ந்து வருவதால் போலீசார் கண்காணிப்பு பணியையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
பட்டாசு திரி
சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசண்முகநாதன் மற்றும் போலீசார் சிவகாமிபுரம் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியில் பட்டாசு கடை நடத்தி வரும் திரவியராஜ் (22) என்பவர் தனது பட்டாசு கடையில் உரிய அனுமதியின்றி பட்டாசு திரிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கடையில் இருந்த ரூ.8,400 மதிப்புள்ள திரிகளை பறிமுதல் செய்தனர்.