மரத்துண்டுகளை ஒட்டும் பசையை தண்ணீரில் கலந்து போதை ஏற்றிய 3 பேர் கைது
தூத்துக்குடியில் மரத்துண்டுகளை ஒட்டும் பசையை தண்ணீரில் கலந்து போதை ஏற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ் மேற்பார்வையில் மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள் மற்றும் போலீசார் நேற்று தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தூத்துக்குடி தேவர்புரம் ரோடு பகுதியை சேர்ந்த மகாராஜன் மகன் கருப்பசாமி (வயது 22), தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த சேதுராமன் மகன் முத்துக்குமார் (19) மற்றும் தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் பகுதியை சேர்ந்த ராஜ் மகன் சிவ பாலமுருகன் (19) ஆகியோர் என்பதும், அவர்கள் மரத்துண்டுகளை ஒட்டக்கூடிய பசையை தண்ணீரில் கலந்து நுகர்வதன் மூலம் போதை ஏற்றியதும் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.