நாயை அரிவாளால் வெட்டிக்கொன்ற 3 பேர் கைது
நீடாமங்கலம் அருகே பெண்ணிடம் தகராறு செய்த போது குரைத்ததால் நாயை அரிவாளால் வெட்டிக்கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே பெண்ணிடம் தகராறு செய்த போது குரைத்ததால் நாயை அரிவாளால் வெட்டிக்கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
வாக்குவாதம்
நீடாமங்கலம் அருகே பூவனூர் பாமனியாறு மேல்கரையை சேர்ந்தவர் ரஜினி, அக்ரஹார பூவனூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது34), இருவரும் உறவினர்கள்.
இவர்கள் இருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள நெய்க்குன்னம் என்ற ஊரில் உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நாயை வெட்டிக்கொன்றனர்
இதை தொடர்ந்து சம்பவத்தன்று இரவு ராஜ்குமாரும் அவரது நண்பர்களும் ரஜினியின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் இல்லாததால் ரஜினியின் மனைவி செல்வியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இவர்களை பார்த்து ரஜினி வளர்த்து வந்த நாய் குரைத்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நாயை அரிவாளால் வெட்டி கொன்று அதை ஆற்றில் வீசி சென்றனர்.
3 பேர் கைது
இதுகுறித்து செல்வி நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார், வலங்கைமான் அருகே அரையூரைச் சேர்ந்த சேனாபதி (28), பாபநாசம் அருகே அன்னப்பன்பேட்டை வெண்ணுக்குடியைச் சேர்ந்த இளங்கோ (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.