காய்கறி கடையில் சாராய பாக்கெட்டுகள் விற்ற 3 பேர் கைது
காய்கறி கடையில் சாராய பாக்கெட்டுகள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடியாத்தம் தரணம்பேட்டை பஜாரில் உள்ள காய்கறி கடையில் சாராய பாக்கெட்டுகள் விற்பதாக புகார்கள் வந்ததன் பேரில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் தரணம்பேட்டை பஜாரில் குறிப்பிட்ட காய்கறி கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஏராளமான சாராய பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பிச்சனூர் பகுதியை சேர்ந்த தமயந்தி (வயது 70) என்பவர் காய்கறி கடை நடத்தி வருவது தெரியவந்தது. அந்த காய்கறி கடைக்கு பேரணாம்பட்டில் இருந்து அதே பிச்சனூர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (35), துரை (49) ஆகியோர் சாராய பாக்கெட்டுகளை கொண்டு வந்து தமயந்தியிடம் கொடுத்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ஏராளமான சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.