பூ வியாபாரியிடம் சங்கிலி பறித்து சென்ற 3 பேர் கைது
கரூர் அருகே பூ வியாபாரியிடம் 3 பவுன் சங்கிலி பறித்து சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்கிலி பறிப்பு
கரூர் அருகே உள்ள பஞ்சமாதேவியை சேர்ந்தவர் சரசு (வயது 65). பூ வியாபாரி. இவர், சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு இருந்த பூக்களை பறித்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் சரசுவின் அருகே வந்தனர். பின்னர் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்து 3 பவுன் தங்கசங்கிலியை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சரசு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் 3 பேரும் சங்கிலியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதுகுறித்து சரசு வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
3 பேர் கைது
அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சரசுவிடம் சங்கிலியை பறித்து சென்றது கரூர் ராயனூர் அண்ணா நகரை சேர்ந்த சந்திர மோகன் என்கிற சக்தி (30), அதே பகுதியை சேர்ந்த நகுலேஸ்வரி (29), கனிஷ்கா ராணி (42) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. ,இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 பவுன் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.