தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற 3 பேர் கைது
லால்குடி அருகே தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
லால்குடி அருகே தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தண்டவாளத்தில் லாரி டயர்கள்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேலவாளாடி ரெயில்வே தண்டவாளத்தில் கடந்த 2-ந்தேதி நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமிகள் லாரி டயர்களை அடுக்கி வைத்து இருந்தனர். இதனிடையே சென்னையில் இருந்து கன்னியாகுமரியை நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.
தண்டவாளத்தில் டயர்கள் இருப்பதை கவனித்து என்ஜின் டிரைவர் அதிர்ச்சி அடைந்து ரெயிலை நிறுத்த முயன்றார். ஆனாலும் ரெயில் என்ஜின் டயர்கள் மீது மோதியது. இதில் ஒரு டயர் என்ஜினில் சிக்கியது. மர்ம ஆசாமிகள் ரெயிலை கவிழ்க்க லாரி டயர்களை தண்டவாளத்தில் வைத்து இத்தகைய சதி செயலில் ஈடுபட்டுள்ளனர்.
3 பேர் கைது
உடனே என்ஜின் டிரைவர் அருகில் உள்ள வாளாடி ரெயில் நிலைய அதிகாரிக்கும், ரெயில்வே மேலாளருக்கும் நடந்த சம்பவம் பற்றி தகவல் கொடுத்தார். அதன் பேரில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் அந்த இடத்தை நள்ளிரவு 12.37 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்றதும், நள்ளிரவு 1.05 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் போது டயர்கள் வைக்கப்பட்டதும், அது என்ஜினில் சிக்கி சுமார் 600 மீட்டர் தூரம் இழுத்துச்சென்றதும் தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க திருச்சி ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் மேலவாளாடி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 36), பிரபாகரன் (44), கார்த்தி (33), ஆகிய 3 பேர் இந்த சதி செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
வாக்குமூலம்
மேலும் அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், வாளாடி ஊராட்சி மன்ற தலைவர் மேலவாளாடிக்கு சரிவர அடிப்படை வசதி செய்து கொடுக்கவில்லை. ரெயில்வே நிர்வாகம் ரெயில்வே கேட் உள்ள பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து கொடுக்கவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கவே இச்செயலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
இது குறித்து திருச்சி மண்டல ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறும்போது, ரெயில்வே போக்குவரத்துத்துறை அதிக மக்கள் பயன்படுத்த கூடிய துறையாகும். அதனை தவிர்த்து ரெயில் தண்டவாளத்தில் அமர்வது, மது அருந்துவது, செல்பி எடுப்பது, அங்கு பொருட்களை வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. சமூக விரோதிகள் யாரேனும் ரெயில் தண்டவாள பகுதியில் ஏதேனும் பொருட்களை வைக்க முயன்றாலோ தண்டவாளத்திற்கு சேதத்தை விளைவிக்க முயன்றாலோ அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.