கல்லூரி மாணவரை தாக்கி பணம் பறித்த 3 பேர் சிக்கினர்
நத்தம் அருகே கல்லூரி மாணவரை பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நத்தம் அருகே உள்ள குமரப்பட்டியை சேர்ந்த சின்னையா மகன் அழகேசன் (வயது 21). இவர் நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று அழகேசன், தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள நத்தம்-துவரங்குறிச்சி நான்கு வழிச்சாலை ஓரமாக நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், அழகேசன் மற்றும் அவரது நண்பர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர். அப்போது அழகேசனை தாக்கி, அவர் வைத்திருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை 3 பேரும் பறித்து சென்றனர்.
இதுகுறித்து அழகேசன், நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அழகேசனிடம் பணம், செல்போன் பறித்தவர்கள், மதுரையை சேர்ந்த ஆகாஷ் என்ற ஜானி (22), நத்தம் அருகே பரளிபுதூர் இந்திராநகரை சேர்ந்த அபிமன்யூ (23), சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த ஹரி தர்ஷன் (எ) மாடு ஹரி (25) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் 3 பேரும் நத்தம் அருகே அத்திப்பட்டி மலைப்பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று, 3 பேரையும் மடக்கி பிடித்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், பட்டாகத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேர் மீது சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் வழிப்பறி, திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.