ஆத்தூர் பகுதியில் சாராயம் விற்ற 3 பேர் சிக்கினர்


ஆத்தூர் பகுதியில் சாராயம் விற்ற 3 பேர் சிக்கினர்
x

ஆத்தூர் பகுதியில் சாராயம் விற்ற 3 பேர் போலீசில் சிக்கினர். அவர்களிடம் இருந்து 220 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்

ஆத்தூர்:

சாராயம் பறிமுதல்

ஆத்தூரை அடுத்த சாத்தப்பாடி பகுதியில் கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியண்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் ஆத்தூர் புங்கவாடி புதூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 37) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் சிறுவாச்சூர் பகுதியில் தோட்டத்தில் வைத்து சாராயம் விற்பனை செய்யப்படுவதாக தலைவாசல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்றபோது, சாராயம் விற்பனை செய்த பிரசாந்த் (28) என்பவரை கைது செய்தனர். மேலும் ஊனத்தூர் பகுதியில் சாராயம் விற்ற அருள்மணி (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரிடம் இருந்தும் 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஊறல் அழிப்பு

ஆத்தூர் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் ஆவாரை மலை முதல் சடையம்பட்டி செல்லும் மலை வரை காப்புக்காடு பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஓடை அருகே சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. வனத்துறையினரை பார்த்ததும் சாராயம் காய்ச்சி கொண்டிருந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ஒருவர் அவர்களிடம் சிக்கினார். அவரிடம் விசாரித்ததில், ஆவாரை பகுதியை சேர்ந்த ஆண்டி மகன் முருகேசன் (30) என்பதும், தப்பி ஓடியவர்கள் பழனி, சுப்பிரமணி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து முருகேசனை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அங்கு 7 பேரல்களில் சாராயம் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த ஊறல் மற்றும் அடுப்புகள் அழிக்கப்பட்டன.


Next Story