(செய்திசிதறல்) வாலிபரை கத்தியால் தாக்கி செல்போன் பறித்த 3 பேருக்கு வலைவீச்சு
வாலிபரை கத்தியால் தாக்கி செல்போன் பறித்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாலிபரை கத்தியால் தாக்கி செல்போன் பறித்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செல்போன் பறிப்பு
லால்குடி அருகே தாளக்குடி கீரமங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது 29). இவர் மாம்பழச்சாலை அருகே உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறிக்க முயன்றனர்.
செல்போனை தர மறுக்கவே அவரை கத்தியால் கீறி செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர் மீது தாக்குதல்
*திருச்சி உறையூர் மேலபாண்டமங்கலத்தை சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் பிரகதீஸ்வரன் (21). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள கோவில் திருவிழாவுக்கு பிரகதீஸ்வரன் சென்று இருந்தார். அங்கு திடீர் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறை பிரகதீஸ்வரன் விலக்கிவிட்டு சமாதானம் செய்து வைத்தார். இதில் ஆத்திரம் அடைந்த 6 பேர் பிரகதீஸ்வரனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து பிரகதீஸ்வரன் உறையூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
*ஸ்ரீரங்கம் திம்மராய சமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்பதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விமானம் தாமதம்
*திருச்சியில் இருந்து குவைத்திற்கு நேற்று காலை 11.35 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இணை விமானம் தாமதமானது. இதன்காரணமாக திருச்சி-குவவைத் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2.20 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்து இருந்த 140 பயணிகளுக்கு விமான நிறுவனத்தின் சார்பில் விமான நிலையத்தின் அருகில் உள்ள தங்கும் விடுதிகளில் உணவு மற்றும் இருப்பிடம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் செய்யப்பட்டு இருந்தது.