ஆசிரியரை காரில் கடத்திய 3 பேர் கைது
நன்னிலம் அருகே ஆசிரியரை காரில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக வக்கீல் மற்றும் பெண் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்
நன்னிலம்:
நன்னிலம் அருகே ஆசிரியரை காரில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக வக்கீல் மற்றும் பெண் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆசிரியர்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் திருநாவுக்கரசு. இவர் குரும்பேரி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ரேவதி என்பவரிடம் ரூ.3 லட்சம் வட்டிக்கு கடன் பெற்றுள்ளார்.
சில மாதங்களாக தொடர்ந்து சதீஷ் திருநாவுக்கரசு வட்டி பணம் கொடுத்து வந்துள்ளார்.அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வட்டி கொடுக்க முடியாத நிலையில் இருந்து வந்துள்ளார்.
காரில் கடத்தல்
இந்த நிலையில் குடவாசல் பகுதியை சேர்ந்த வக்கீலான சிவசங்கரன் என்பவர் கடந்த 20-ந் தேதி மாலை கங்களாஞ்சேரி பாலத்திற்கு வருமாறு சதீஷ் திருநாவுக்கரசை அழைத்துள்ளார். இதனால் அவர் அங்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த சிலர் சதீஷ் திருநாவுக்கரசை காரில் கடத்தி சென்று குடவாசலில் ஒரு அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.
3 பேர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் நன்னிலம் போலீசார், குடவாசலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சதீஷ் திருநாவுக்கரசை மீட்டனர். மேலும் அவரை கடத்தியதாக தஞ்சை பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது24), குடவாசல் அருகே உள்ள மூலங்குடி கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் (26), புதுக்குடி பகுதியை சேர்ந்த முகேஷ் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
வக்கீல்-பெண்ணுக்கு வலைவீச்சு
விசாரணையில் ரேவதியிடம் வாங்கிய பணத்தை கொடுக்காததால் தான் சதீஷ் திருநாவுக்கரசு கடத்தப்பட்டது தெரிய வந்தது. இந்த வழக்கு தொடர்பாக வக்கீல் சிவசங்கரன், ரேவதி ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.