கோர்ட்டில் சரணடைந்த 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
நாகர்கோவிலில் வீடு புகுந்து நகை கொள்ைளயடிக்கப்பட்ட வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். தேடப்பட்ட மற்றொருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் வீடு புகுந்து நகை கொள்ைளயடிக்கப்பட்ட வழக்கில் கோர்ட்டில் சரண் அடைந்த 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். தேடப்பட்ட மற்றொருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீடுபுகுந்து நகை கொள்ளை
நாகர்கோவில் வேதநகர் மேலப்புதுத் தெருவை சோ்ந்தவர் முகமது உமர் சாகிப் (வயது 53). வெளிநாட்டில் டிரைவராக வேலை செய்து வந்த இவர் தற்போது வேதநகரில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தபோது பர்தா அணிந்த மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து அவரை தாக்கி கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்தது. அப்போது ஆஸ்பத்திரிக்கு சென்றிருந்த முகமது உமரின் மனைவி ஜாஸ்மின் மற்றும் மகள் வீட்டுக்கு வரவே கொள்ளை கும்பல் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி காரில் தப்பிச் செல்ல முயன்றனர்.
அப்போது அக்கம் பக்கத்தினர் திரண்டு காரை மடக்கி, கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இடலாக்குடி பரசுராம் தெருவை சேர்ந்த ரகீம் (33) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த கொள்ளை சம்பவத்தில் அழகியபாண்டியபுரம் எட்டாமடையை சேர்ந்த கவுரி (36), இடலாக்குடிவயல் தெருவை சேர்ந்த அமீர், கோட்டார் மேலச்சரக்கல்விளையைச் சேர்ந்த தர்வேஷ் மீரான் (40), கோவில்பட்டியை சேர்ந்த சாா்லஸ், இருளப்பபுரத்தைச் சேர்ந்த ஷேக் மீரான் (32), இவருடைய அண்ணன் முகமது மைதீன் புகாரி (34) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
போலீஸ் காவல்
இதனைதொடர்ந்து கவுரி, அமீர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் தலைமறைவாக இருந்த 4 பேரை பிடிக்க நாகர்கோவில் துணை சூப்பிரண்டு நவீன்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் தலைமறைவாக இருந்த இருளப்பபுரத்தை சேர்ந்த ஷேக்மீரான் (32), முகமது மைதீன் புகாரி (34), மேலசரக்கல்விளையைச் சேர்ந்த தர்வேஷ் மீரான் (35) ஆகிய 3 பேரும் நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் நேற்று மாலையில் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
14 பவுன் நகை மீட்பு
கைது செய்யப்பட்ட 3 பேர் மற்றும் சரண் அடைந்த 3 பேர் கொடுத்த தகவலின்பேரில் 14 பவுன் நகைகள் போலீசாரால் மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் தேடப்பட்ட கோவில்பட்டியை சேர்ந்த சார்லசையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரும் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.