ரூ.4½ லட்சம் கொள்ளையடித்த கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது


வேதாரண்யம் பகுதியில் வங்கியில் பணம் எடுத்து செல்பவர்களை குறி வைத்து ரூ.4½ லட்சம் கொள்ளையடித்த கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மீட்கப்பட்டது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் வங்கியில் பணம் எடுத்து செல்பவர்களை குறி வைத்து ரூ.4½ லட்சம் கொள்ளையடித்த கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மீட்கப்பட்டது.

குறிவைத்து கொள்ளை

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வேட்டைக்காரனிருப்பு, கள்ளிமேடு, கரியாப்பட்டினம், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கிகளில் பணம் எடுத்து செல்பவர்களை குறி வைத்து அவர்களிடம் இருந்து ரூ.4½ லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் கடந்த 5 மாதங்களாக நடந்து வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாஜலம், துரைராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

செல்போன் உரையாடல்

போலீசார் வங்கிகள் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மற்றும் செல்போன் உரையாடல்கள் மூலம் கொள்ளையர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் வேட்டைக்காரனிருப்பு அருகில் உள்ள புதுப்பள்ளியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது

விசாரணையில் அவர்கள் திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த குண்டு கார்த்திக்(வயது 33), அவருடைய மனைவி காயத்ரி(32) மற்றும் காயத்ரியின் தந்தை கணேசன்(60) என்பதும் இவர்கள் வேட்டைக்காரனிருப்பு, கள்ளிமேடு, கரியாப்பட்டினம், வடமழை, தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளில் இருந்து பணம் எடுத்து வருபவர்களை குறி வைத்து பல லட்ச ரூபாய் கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து கார்த்திக், காயத்ரி, கணேசன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை மீட்டனர்.

சிறையில் அடைப்பு

பின்னர் அவர்கள் 3 பேரையும் நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தி குண்டு கார்த்திக், கணேசன் ஆகிய 2 பேரை நாகை சிறையிலும், காயத்ரியை திருவாருர் மகளிர் சிறையிலும் அடைத்தனர்.


Next Story