தாசில்தார் உள்பட 3 பேர் இழப்பீடு வழங்க வேண்டும்
நிலத்தை அளவீடு செய்யாமல் அலைக்கழித்ததற்காக பாதிக்கப்பட்ட விவசாயிக்கு தாசில்தார் உள்ளிட்ட 3 பேர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 39), விவசாயி. இவருடைய தந்தை சுப்பிரமணியன் பெயரில் பூர்வீகமாக 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் கார்த்திகேயனுக்கு கிடைத்த பாகமான ஒரு ஏக்கர் நிலத்தை அளவீடு செய்வதற்காக அவர் 17.6.2020 அன்று விக்கிரவாண்டி நிலஅளவை பிரிவு தாசில்தார் அலுவலகத்தை அணுகினார்.
ஆனால் நில அளவைப்பிரிவு சித்தலம்பட்டு சர்வேயர், தலைமை நில அளவையர், விக்கிரவாண்டி தாசில்தார் ஆகியோர் அவருடைய நிலத்தை அளவீடு செய்யவில்லை. அதன் பிறகு கார்த்திகேயன், 2 மாதங்கள் கழித்து அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.160-ஐ செலுத்தி மீண்டும் விண்ணப்பித்தார். இருப்பினும் அவருடைய நிலத்தை அளவீடு செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இழப்பீடு
இதனால் மனவேதனை அடைந்த கார்த்திகேயன், இதுபற்றி விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீராமொய்தீன், அமலா ஆகியோர் விசாரித்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதாவது பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு அவர் அரசுக்கு செலுத்திய ரூ.160-ஐ 12 சதவீத வட்டியுடன் அளிக்க வேண்டும். மனுதாரரின் மனையை அளந்து காண்பிக்க வேண்டும். எதிர்தரப்பினர்களான சித்தலம்பட்டு சர்வேயர், தலைமை நில அளவையர், விக்கிரவாண்டி தாசில்தார் ஆகியோரின் சேவை குறைபாட்டினால் மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.20 ஆயிரம் அளிக்க வேண்டும். மேலும் மனுதாரருக்கு வழக்கு செலவுத்தொகையாக ரூ.5 ஆயிரத்தையும் அளிக்க வேண்டும், மேலும் இந்த ஆணைகள் அனைத்தும் இவ்வாணை பிறப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து 45 நாட்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.