தம்பதி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
தகராறை விலக்க வந்த ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் தம்பதி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
தகராறை விலக்க வந்த ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் தம்பதி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
பெற்றோர் பராமரிப்பு
விருதுநகர் அருகே உள்ள பெரியவள்ளி குளத்தை சேர்ந்தவர் லதா (வயது 45). இவருடைய சகோதரர் கண்ணன் (44). இவர் அழகாபுரியில் வசித்து வந்தார். இவர்களது பெற்றோரை பராமரிப்பதிலும், சொத்தை பிரித்துக் கொள்வதிலும் இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.
லதா தனது தந்தை அழகர்சாமியை பராமரிப்பது என்றும், தாயாரை கண்ணன் பராமரிக்க வேண்டும் என்றும் முடிவு செய்து தாயாருடன் ஒரு ஆட்டோவில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி அழகாபுரியில் உள்ள வீட்டுக்கு கண்ணன் சென்றார்.
ஆட்டோவை பெரியவள்ளி குளத்தை சேர்ந்த பாலாஜி (37) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது லதா, கண்ணனிடம் தாயாரை பராமரித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியதுடன் தந்தை அழகர்சாமியின் பொருட்களை எடுத்துச் செல்ல வந்ததாக தெரிவித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
படுகொலை
தகராறு முற்றியதில் கண்ணன், அவரது மனைவி செந்தாமரை (40), மைத்துனர் தூத்துக்குடி மாவட்டம் பரமகோட்டையைச் சேர்ந்த சுப்புராஜ் (58) ஆகிய 3 பேரும் லதாவை அரிவாளால் வெட்ட முயன்றனர். அப்போது ஆட்டோ டிரைவர் பாலாஜி தகராறை விலக்க வந்த போது டிரைவர் பாலாஜிக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுதொடர்பாக லதா கொடுத்த புகாரின் பேரில் கண்ணன், செந்தாமரை, சுப்புராஜ் ஆகிய 3 பேரையும் சூலக்கரை போலீசார் கைது செய்து மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
3 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்த வழக்கை மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமானந்தகுமார் விசாரித்து கண்ணன், செந்தாமரை, சுப்புராஜ் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.