வாழப்பாடியில் பட்டப்பகலில் துணிகரம்: நகைக்கடையில் 3 பவுன் நகையை திருடிய பெண்கள் முக கவசம் அணிந்து வந்து கைவரிசை
வாழப்பாடியில் நகைக்கடைக்கு முக கவசம் அணிந்து வந்த 3 பெண்கள் 3 பவுன் நகையை திருடிச்சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது.
வாழப்பாடி,
நகைக்கடை
வாழப்பாடியில் நகைக்கடை நடத்தி வருபவர் ராஜன் (வயது 54). நேற்று முன்தினம் இவரது நகைக்கடைக்கு முககவசம் அணிந்த பெண் ஒருவர் கடைக்கு வந்தார். அவர் மோதிரம் வேண்டும் என கேட்டு மாடல் பார்த்துள்ளார்.
5 நிமிடத்திற்கு பிறகு முக கவசம் அணிந்து வந்த 2 பெண்கள் ஒரு பவுன் சங்கிலி இதே மாடலில் வேண்டும் என நகை கேட்டுள்ளனர். அந்த மாடல் இல்லை என கூறியதால், 3 பவுன் சங்கிலி வேண்டும் என கேட்டுள்ளனர்.
அப்போது மோதிரம் வாங்க வந்த பெண் எனக்கு அவசரம் என்று கூறி கடை உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி உள்ளார். அந்த நேரத்தில் சிவப்பு நிற உடை அணிந்த பெண் நகையை கையில் லாவகமாக சுருட்டி தனது ஜாக்கெட்டுக்குள் மறைத்தார்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள்
இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. பின்பு முதலில் மோதிரம் வாங்க வந்த பெண் கிளம்பிய உடன், சிறிது நேரத்தில் மற்ற 2 பெண்களும் பிறகு வருகிறோம் என கூறி அங்கிருந்து சென்று விட்டனர். அவர்கள் சென்ற பிறகுதான் தங்க நகை காணாமல் போனதை கடை உரிமையாளர் கண்டுபிடித்தார். பின்னர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனை செய்தபோது நகை திருட்டை உறுதி செய்தனர்.
நகைக்கடையில் பட்டப்பகலில் முக கவசம் அணிந்த 3 பெண்கள் வந்து 3 பவுன் தங்க சங்கிலியை ஜாக்கெட்டுக்குள் மறைத்து திருடிய சம்பவம் குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திருட்டு பெண்கள் குறித்து தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று கடை உரிமையாளரின் விளம்பரம் புகைப்படத்துடன் சமூக ஊடகங்களில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அடையாளம் தெரியாத அந்த 3 பெண்கள் குறித்து வாழப்பாடி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.